பல்லாவரம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வடமாநில இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை குரோம்பேட்டை, நாகல்கேணி அருகே பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட நபர்கள் தங்கி கட்டட வேலை செய்து வருகின்றனர். இவர்களில் நேற்று முன்தினம் (பிப்.15) கணவன்-மனைவி இருவரும் கட்டட வேலைக்குச் செல்லும் முன் தங்களது 4 வயது மகளை உறவினரின் வீட்டில் விட்டுச் சென்றுள்ளனர். தொடர்ந்து வேலையை முடித்துக் கொண்டு மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்து இருவரும் அக்கம்பக்கத்தில் குழந்தையை தேடிப்பார்த்துள்ளனர். அப்போது, மயங்கிய நிலையில் தங்கள் குழந்தை ஓர் இடத்தில் கிடந்ததைப் பார்த்து அதிர்ந்த பெற்றோர், அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிறுமிக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அங்கு விரைந்த காவல்துறையினர், சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், இவர்களுடன் தங்கியிருந்த, பீகார் மாநிலத்தை சேர்ந்த ஜாஸ் மொய்தீன் (வயது 28) என்பவர் சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. பின்னர், தலைமறைவாகி இருந்த ஜாஸ் மொய்தீனை கைது செய்த காவல்துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்., ஜாஸ் மொய்தீனை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவல் துறையினர் புழல் சிறையில் அடைத்தனர்.