கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணி ஒருவர் உள்ளூர் வாசிகள் இருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் திங்கட்கிழமை காலை அரங்கேறியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த 44 வயதான பெண் சுற்றுலாப் பயணி, கொல்லம் வள்ளிக்காவு அருகே கடற்கரையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்துள்ளார். அவர், உள்ளூர் வாசிகள் இருவருடன் நட்பாக இருந்துள்ளார். அவர்களின் நட்பைப் பெற்ற பிறகு, அவர்கள் அந்த பெண்ணுக்கு சிகரெட்டை கொடுத்துள்ளனர். ஆனால், அதை வாங்க அவர் மறுத்துவிட்டார். பின்னர், அவருக்கு மது கொடுத்துள்ளனர். அதை வாங்கி குடித்த பின் அந்த பெண் போதையாகியுள்ளார்.
பின்னர், அந்த இருவரும் அந்த பெண்ணை தங்களது பைக்கில் ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து அவரை இருவரும் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் சுயநினைவு திரும்பியதும் அங்கிருந்த ஒரு ஆசிரமத்திற்கு சென்றுள்ளார். அங்கிருப்பவர்களிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். பின்னர் அந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக கருநாகப்பள்ளி காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த உள்ளூர் வாசிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.