தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் வேம்பார் சிந்தாமணி நகரைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 3 குழந்தைகள். இந்நிலையில், சம்பவத்தன்று முத்துக்குமார் வழக்கம் போல் கடலுக்கு மீன்பிடிக்க சென்று விட்டார். தனது இரண்டு குழந்தைகளை பள்ளிக்கு சாந்தி அனுப்பி வைத்தார். 3-வது குழந்தையான சிறுவன் அஸ்வின்குமார், காய்ச்சல் காரணமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.
இந்நிலையில், தாய் சாந்தி நேற்று மாலை வெளியே சென்றுள்ளார். சிறுவன் அஸ்வின்குமார் மட்டும் வீட்டில் தனிமையில் இருந்தார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு திரும்பிய சாந்தி, வீட்டில் அஸ்வின் குமார் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். உடனடியாக இதுகுறித்து சூரங்குடி கவால் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சிறுவனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். 7 வயது சிறுவனை யார் கொலை செய்தது? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது தொடர்பான எந்த விவரங்களும் போலீசாருக்கு விசாரணையில் புலப்படாத நிலையில், தாமஸ் என்ற 19 வயது இளைஞரை போலீசார் சந்தேகத்தின் பெயரில் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கஞ்சா போதையில் வீட்டிற்குள் தனியாக இருந்த 7 வயது சிறுவனை தாமஸ் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றதாகவும், அப்போது சிறுவன் கூச்சலிட்டதால் ஆத்திரத்தில் சிறிய கத்தியால் சிறுவனை கொடூரமாகக் கொன்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் கொலைக்கான காரணம் தெரியாமல் இருந்த நிலையில், தற்போது கஞ்சா போதை இளைஞரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு சிறுவன் அஸ்வின் குமார் கொலை செய்யப்பட்ட தகவல் தீயாய் பரவ, அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.