கார் கண்ணாடிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி கருப்பு நிற ஸ்டிக்கர்கள் ஒட்ட தடை நெல்லை மாநகரில் அமலுக்கு வந்தது. நெல்லை மாநகர பகுதிகளில் காவல்துறை தீவிர சோதனை செய்து விதிமுறை மீறிய கார்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
மத்திய மோட்டார் வாகன விதி எண் 100(2)-ன் படி பொதுமக்கள் பயன்படுத்தும் நான்கு சக்கர வாகனங்களின் முன்புறம், பின்புறம் உள்ள கண்ணாடிகளில் 70 சதவீதம் ஒளி உட்புகும் அளவிற்கும் மற்றும் பக்கவாட்டில் உள்ள கண்ணாடிகளில் 50 சதவீதம் ஒளி உட்புகும் அளவிற்கும் கருப்பு நிற ஸ்டிக்கர் (Sun control film) ஒட்டிக்கொள்ளலாம்.
ஆனால் தற்பொழுது திருநெல்வேலி மாநகரத்தில் பலர் விதியை மீறி தங்களது நான்கு சக்கர வாகனங்களிலும், அதே போல் பொது போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும். ஆம்னி பேருந்துகள், சுற்றுலா பேருந்துகள் மற்றும் வேன்களில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட குறைந்த அளவு ஒளி உட்புகும் அளவிற்கு கருப்பு நிற ஸ்டிக்கர் (Sun control film) ஒட்டி பயன்படுத்தி வருவதாக தெரியவருகிறது.
இன்று முதல் நெல்லை மாநகர பகுதிகளில் காவல்துறையினருடன் இணைந்து போக்குவரத்து துறையினரும் நான்கு சக்கர வாகனங்களை ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். ஆய்வின்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட குறைந்த அளவு ஒளி உட்புகும் அளவிற்கு கருப்பு நிற ஸ்டிக்கர் (Sun control film) ஒட்டி நெல்லை மாநகருக்குள் இயக்கப்படும் நான்கு சக்கர வாகனங்களுக்கு, மத்திய மோட்டார் வாகன விதி எண் 100-ன் படி அபராதம் விதிக்கப்படுவதோடு. மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 53(1)-ன் படி எவ்வித பாரபட்சமின்றி வாகனத்தின் உரிமமும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.