தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சி. விஜயபாஸ்கர். இவர் தற்போது புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியின் சட்டசபை உறுப்பினராக இருக்கிறார். இவர் மீதும், இவருடைய மனைவி ரம்யா மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் கடந்த 2021 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அலுவலகம் மற்றும் அவருடைய ஆதரவாளர்களின் வீடுகள் உட்பட 30க்கும் மேற்பட்ட பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டது.
இந்த நிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் 216 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று தாக்கல் செய்துள்ளனர்.