ஆன்லைன் விளையாட்டில் பல லட்ச ரூபாய் பணத்தை இழந்ததால் சினிமா கேமராமேன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே மார்த்தாண்டன்துறையை சேர்ந்த தேவதாசன்(40), கோவை காந்திபுரம் பகுதியில் தங்கி சினிமா கேமராமேனாக பணியாற்றி வந்தார். அவர் ஆன்லைன் விளையாட்டில் பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்து, கடன் ஏற்பட்டதால், நிலத்தை விற்று கடனை அடைத்துள்ளார். அதன்பிறகு மனைவி ஊரான பூத்துறை கோயில் வளாகத்தில் வந்து தங்கியிருந்தார்.
இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் மார்த்தாண்டன்துறைக்கு சென்று தனது பெற்றோரிடம் பணத்தையும், சொத்தையும் இழந்தது குறித்து கூறி அழுதுள்ளார். பிறகு இரவு 11.15 மணியளவில் வீட்டு மாடிக்கு சென்று அறையை பூட்டிக்கொண்டார். சந்தேகமடைந்த உறவினர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது, மின்விசிறி கொக்கியில் தூக்கில் தொங்கிய நிலையில் தேவதாசன் கிடந்துள்ளார். உடனே உறவினர்கள் கதவை உடைத்து அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், தேவதாசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுக்களால் பலர் பணத்தை இழந்து கடனில் தவிப்பதும், தற்கொலை செய்துகொள்வதும் தொடர்கதையாகி வருகிறது. ஆன்லைன் விளையாட்டில் பல லட்ச ரூபாய் பணத்தை இழந்ததால் சினிமா கேமராமேன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.