நாடு முழுவதும் துவரம்பருப்பு கையிருப்பை கண்காணிக்க குழு அமைத்த மத்திய அரசு.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நாடு முழுவதும் துவரம்பருப்பு கையிருப்பை கண்காணிக்க ஏதுவாக மத்திய நுகர்வோர் நலத்துறை கூடுதல் செயலாளர் நிதி கரே தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழு, அந்தந்த மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் துவரம்பருப்பு இறக்குமதியாளர்கள், ஆலை நிர்வாகிகள், வர்த்தகர்கள் ஆகியோரிடம் உள்ள கையிருப்பை குறிப்பிட்டக் கால இடைவெளியில் கண்காணிக்கும் பணியை மேற்கொள்ளும்.
போதுமான அளவுக்கு துவரம்பருப்பு இறக்குமதி செய்யப்பட்டபோதிலும், அதனை விற்பனைக்கு கொண்டு செல்லாமல், சந்தையில் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்குவதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதேநேரத்தில், பருப்பு பதுக்கல்காரர்கள் மற்றும் நேர்மையற்ற வணிகர்களை அடையாளம் காண்பதில் அரசின் தலையீட்டை உறுதி செய்ய ஏதுவாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் எதிர்வரும் மாதங்களில் துவரம்பருப்பு விலை, அதிகரிக்காமல் இருக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறது. அதே நேரத்தில், துவரம்பருப்பு தவிர மற்ற பருப்புகளின் சந்தை கையிருப்பு குறித்தும் மத்திய அரசு உற்று கண்காணித்து வருவதுடன், எதிர்வரும் மாதங்களில் உள்நோக்கத்துடன் விலையேற்றம் செய்வதை கட்டுப்படுத்துவதற்கும் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன்மூலம் 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955-ன் கீழ், துவரம்பருப்பு கையிருப்பு குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு திரும்பப் பெறப்படுகிறது. குறிப்பிட்ட சில நாடுகளிலிருந்து பருப்பு இறக்குமதியை தடையின்றி மேற்கொள்வதற்காக இறக்குமதிக்கான 10 சதவீத வரியை மத்திய அரசு விலக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.