காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது சென்னைக்கு 340 கி.மீ தொலைவில் கிழக்கு – தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெற உள்ள நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று பிற்பகல் புயலாக வலுப்பெற உள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னையை நெருங்குகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து சென்ற நிலையில், கடந்த 6 மணி நேரத்தில் வேகம் சற்று அதிகரித்து மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்கிறது. தற்போது சென்னைக்கு 340 கி.மீ தொலைவில் கிழக்கு – தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.