கோவாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் டெல்லியைச் சார்ந்த குடும்பம் ஒன்று நள்ளிரவில் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியை சார்ந்த ஜத்தின் சர்மா என்பவர் அவரது குடும்பத்துடன் கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது கோவாவின் அஞ்சுனா பகுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். ஹோட்டலில் பணி செய்த ஊழியர்களின் நடவடிக்கைகள் சரியில்லாத காரணத்தால் அவர்களை பற்றி ஜத்தின் சர்மா குடும்பத்தினர் ஹோட்டல் நிர்வாகத்திடம் புகார் செய்ததாக தெரிகிறது. இந்த புகாரின் அடிப்படையில் அந்த ஊழியர்கள் 4 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட பிறகு நள்ளிரவு ஜத்தின் சர்மாவின் அறைக்குள் புகுந்த நான்கு பேர் அவரையும் அவரது குடும்பத்தினரையும் கத்தி வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தாக்கியுள்ளனர்.
இது தொடர்பாக அவர் காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த நான்கு பேரை கைது செய்த காவல்துறை அவர்களின் மேல் 324 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து பின்னர் எச்சரிக்கை செய்து விட்டு விடுவித்தது. இதனைத் தொடர்ந்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது தொடர்பாக பதிவு செய்திருந்தார். இந்தப் பதிவு கோவாவின் முதலமைச்சர் கவனம் வரை சென்றிருக்கிறது. கோவா முதல்வரின் தலையீட்டின் பேரில் அவரது குடும்பத்தார் மீது தாக்குதல் நடத்திய நான்கு பேரும் கைது செய்யப்பட்டு 307 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சுற்றுலா வந்த நபர்கள் தாக்கப்பட்ட சம்பவம் கோவாவில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.