டெல்லியில் கொசுவர்த்தியை ஏற்றி வைத்துவிட்டு தூங்கிய ஒரே குடும்பத்தைச் சார்ந்த ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தலைநகர் டெல்லியின் சாஸ்திரி பார்க் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கொசு தொல்லை அதிகமாக இருந்ததால் தினமும் வீட்டில் கொசுவர்த்தியை ஏற்றி வைத்துவிட்டு உறங்கியுள்ளனர். நேற்ளிரவும் அதேபோல கொசுவர்த்தியை ஏற்றிவிட்டு உறங்கச் சென்றுள்ளனர். இன்று காலை வெகு நேரமாகியும் அவர்களின் வீடு திறக்கப்படாததால் அருகில் இருந்தவர்கள் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது ஆறு பேரும் மரணம் மரணமடைந்து சடலமாக கிடப்பதை கண்டு காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர் .
இச்சம்பவத்தை தொடர்ந்து அவர்களது சடலத்தை கைப்பற்றிய காவல்துறை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் அவர்களது வீட்டிற்குள் சென்றபோதே மூச்சு விடுவதற்கு சிரமமாக இருந்துள்ளது. இதனால் ஜன்னல் கதவுகளை திறந்து வைத்த பின்பே ஓரளவு மூச்சுவிட முடிந்திருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையின் தரப்பில் கொசுத் தொல்லை காரணமாக அதிகமான கொசுவர்த்தியை ஏற்றி வைத்து உறங்கியதால் கொசுவர்த்தியில் இருந்து வந்த கார்பன் மோனாக்சைடு விஷமாக மாறி அவர்களது உயிரை குடித்துள்ளது என தெரிவித்துள்ளனர். கொசுவர்த்தியால் ஒரே குடும்பத்தைச் சார்ந்த ஆறு பேர் மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.