மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு புனித நீராடி விட்டு சொந்த ஊருக்கு திரும்பும்போது, சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா ஜனவரி 13ஆம் தேதி தொடங்கியது. இது வரும் 26ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. மகா கும்பமேளாவின் போது, நதி நீரில் புனித நீராடுவதற்காக கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அந்தவகையில், ஜனவரி 13ஆம் தேதி முதல் நதியில் நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை 54.31 கோடியை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் டோங் மாவட்டத்தின் தியோலி பகுதியைச் சேர்ந்த முக்த் பிஹாரி என்பவர் தனது மனைவி ஹுடே தேவி மற்றும் குடும்ப உறுப்பினர்களான நந்தி சோனி, ராகேஷ் மற்றும் நபிர் ஆகியோருடன் மகா கும்பமேளாவுக்கு சென்றுள்ளார். அங்கு புனித நீராடிவிட்டு, அனைவரும் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இவர்கள் சென்ற காரை திபேஷ் பர்வானி என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.
இந்த கார், ராஜஸ்தான் மாநிலம் துஷா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஓட்டுநர் மட்டும் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இந்த விபத்தில், லாரி ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளரும் படுகாயமடைந்தனர்.
இந்த தகவல் அறிந்து உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், படுகாயமடைந்த 3 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த 5 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : SBI வங்கியில் 1,194 காலியிடங்கள்..!! சென்னையில் வேலை..!! தேர்வு கிடையாது..!! மாதம் ரூ.80,000 வரை சம்பளம்..!!