ஐபிஎம் நிறுவனத்தில் 7800 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக ஐபிஎம் சிஇஓ அரவிந்த் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலகளவில் பெருநிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அமேசான், ட்விட்டர், கூகுள் என மிகப் பெரிய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. மைக்ரோசாப்ட் நிறுவனம் 10,000 ஊழியர்களையும், ஆல்பபெட் நிறுவனம் 12,000 ஊழியர்களையும், ஸ்பாடிஃபை நிறுவனம் 600 ஊழியர்களையும், ஜூம் நிறுவனம் 1300 ஊழியர்களையும், டிஸ்னி 7,000 ஊழியர்களையும் சில மாதங்களுக்கு முன்பு பணிநீக்கம் செய்தது.
இந்நிலையில், மென்பொருள் துறையில் கொடிகட்டி பறக்கும் முன்னணி நிறுவனமான ஐபிஎம் நிறுவனம், ஊழியர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது. ஐபிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், இந்திய வம்சாவளியைச் சார்ந்தவருமான அரவிந்த் கிருஷ்ணா சமீபத்தில் புளூம்பெர்க் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘பேக் ஆஃபீஸ் ஃபங்ஷன், மனிதவள பிரிவு போன்ற பல பிரிவு ஊழியர்களின் புதிதாக ஆட்சேர்ப்பு நிறுத்தவும், ஆட்களை குறைக்கவும் திட்டமிட்டுள்ளோம். அதன்படி, வாடிக்கையாளர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளாத ஊழியர்கள் மட்டுமே ஐபிஎம் நிறுவனத்தில் 26,000 பேர் உள்ளனர்.
இந்நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில் இந்த 26,000 ஊழியர்களில் சுமார் 30% ஊழியர்களை ஐபிஎம் நிறுவனம் பணி நீக்கம் செய்ய உள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமேஷன் ஆகிய தொழில்நுட்பத்தின் உதவிகளின் மூலம் பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களின் இடத்தை நிரப்ப திட்டமிட்டுள்ளோம். செயற்கை நுண்ணறிவு துறையில் தற்போது பிரபலமாகியுள்ள ChatGpt மற்றும் OpenAI தொழில்நுட்பத்தின் உதவியுடன் தொழிற்சாலைகளில் வேலைத் திறனை அதிகரிக்க முடியும் ‘ எனவும் அரவிந்த் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.