தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது கடைசி படமாக ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்றது. விஜய் சென்னை திரும்பியுள்ள நிலையில், நேற்று மதுரை விமான நிலையத்தில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மதுரை விமான நிலையத்திற்கு விஜய் வருகை தந்தபோது, அவருக்கு சால்வை போர்த்த இன்பராஜ் என்கிற ரசிகர் அவரை நெருங்கினார். ஆனால், விஜயின் பாதுகாவலர் அந்த ரசிகரின் தலையில் துப்பாக்கியை எடுத்து வைத்த சம்பவம் தான் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பின்னர், அந்த நபரை விசாரித்தபோது, அவர் விஜய்யின் தீவிர ரசிகர் என்பது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து இன்பராஜ் கூறுகையில், ”தலைவர் விஜய் மதுரை விமான நிலையத்துக்கு வருவது தெரிந்து அங்கு சென்றேன். அவர் காரில் வந்து இறங்கிய இடத்தில்தான் நின்று கொண்டிருந்தேன். எப்படியாவது அவருக்கு சால்வை அணிவிக்க வேண்டுமென தயாராக வைத்திருந்தேன். பின்னர், அவர் வந்ததும் தலைவரை நோக்கி ஓட்டினேன். ஆனால், பாதுகாவலர்கள் என்னை தடுத்தார்கள்.
இதில் எனக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. எனது தலையில் யார் துப்பாக்கி வைத்தது என்று தெரியாது. தவறாக வைத்திருக்கலாம். அது பற்றியெல்லாம் எனக்கு துளியும் கவலை இல்லை. எனக்கு மேல் அங்கு பாதுகாப்பு இருப்பது மகிழ்ச்சி தான். தலைவரை பாதுகாப்பாக அனுப்ப வேண்டியது பாதுகாவலர்களின் கடமை. அப்படியே துப்பாக்கியால் சுட்டிருந்தாலும் நான் அங்கேயேதான் நின்று கொண்டிருப்பேன். 33 ஆண்டுகளாக நான் விஜய் ரசிகர். எனது திருமணத்தை தலைவர் தான் நடத்தி வைத்தார். அவருக்கு தொண்டர், ரசிகர் என்பதைவிட அவர் எனது ரத்ததுடன் கலந்த உயிர்” என்று கூறியுள்ளார்.
Read More : நீங்க இப்போ தான் புதுசா கார் ஓட்டுறீங்களா..? கியர் மூலம் மைலேஜை அதிகரிப்பது எப்படி..? சூப்பர் டிப்ஸ் இதோ..!!