அமெரிக்காவின் நியூயார்க் நகரின் ஜான் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் 167 பயணிகளுடன் விமானம் ஒன்று, கரீபியன் நாடான பார்படாசில் இருந்து வந்து தரையிறங்கியது. விமானம் தரையிறங்கியதும் பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறங்குவதற்கு தயாராகி கொண்டிருந்தனர்.அப்போது விமானத்தில் பயணி ஒருவர் வைத்திருந்த ‘லேப்-டாப்’ திடீரென தீப்பிடித்து எரிந்தது.
பயணிகள் அலறியடித்து ஓட்டம்
விமானத்தில் தீப் பற்றி எரிந்ததும் பயணிகள் மத்தியில் பதற்றமும், பீதியும் உருவானது. இதையடுத்து, விமான ஊழியர்கள் பயணிகள் அனைவரையும் அவசர அவசரமாக வெளியேற்றினர். அவசரகால வழி மற்றும் வழக்கமான பாதை வழியாக 167 பேரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். எனினும் அவசரமாக வெளியேறியபோது ஏற்பட்ட நெரிசல் மற்றும் புகையை சுவாசித்த பயணிகள் 7 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. விமானம் தரையிறங்கிய பிறகு தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.