அரியானா மாநிலத்தில் நேற்று இரவு முதல் பல்வேறு பகுதிகளில் மதக்கலவரம் ஏற்பட்டு இருக்கும் நிலையில், பள்ளிவாசலை எரித்து இமாமை 80 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக கொலை செய்து இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக ஆளும் அரியானா மாநிலத்தின் குருகிராம் மாவட்டத்தில் உள்ள நுஹ் என்ற பகுதியில் விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினர் ஊர்வலம் சென்றனர். அப்போது ஏற்பட்ட மத வன்முறையில், வாகனங்கள், கடைகள், வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. சாலையோரம் இருந்த கடைகளும் அடித்து தகர்க்கப்பட்டன. இதில் 3 பேர் கொடூரமாக கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து குருகிராம் மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
நுஹ் பகுதிக்குள் வெளிநபர்கள் நுழையாத வகையில் எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. தற்போது புதிதாக வன்முறை சம்பவங்கள் நிகழவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் அதிர்ச்சிகரமாக ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறது அரியானா போலீஸ். குருகிராம் பகுதியில் உள்ள ஜமா மசூதியை இரவு 80 பேர் கொண்ட கும்பல் தீ வைத்து எரித்து, பள்ளிவாசல் இமாமை கொடூரமாக கொலை செய்து இருக்கிறது. மற்றொரு நபர் மருத்துவமனையில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
துணை காவல் ஆணையர் நிதிஷ் அகர்வால் தெரிவிக்கையில், “செக்டார் 57 இல் உள்ள அஞ்சுமான் ஜமா மசூதி செவ்வாய்கிழமை அதிகாலை தீ வைக்கப்பட்டது. சிலரை அடையாளம் கண்டுள்ளோம். உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும். இமாமும் மற்றொரு நபரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு வெட்டு காயங்கள் ஏற்பட்டு உள்ளன.” என்றார். காவல் ஆணையர் கலா ராமச்சந்திரன் கூறுகையில், “ஒருவர் கொல்லப்பட்டு உள்ளார். மற்றொருவர் படுகாயம் அடைந்து உள்ளனர். அதிகாலை 12.10 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இரவு முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. சிலரை சுற்றி வளைத்தோம். வழிபாட்டு தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.” என்றார்.