ஆதிதிராவிடர் தொழில் முனைவோருக்கு சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க ரூ.90 லட்சம் மானியம் வழங்கப்படும்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் 2022-2023-ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது கீழ்க்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவராக நியமனம் பெற்று, ரூ.3 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் விற்பனை நிலையம் தொடங்கிட, தாட்கோ பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் மூலம் ரூ.90 லட்சம் மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரின் 2022-2023-ம் ஆண்டிற்கான அறிவிப்பினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு 80 ஆதிதிராவிடர் தொழில் முனைவோர்களுக்கும், 20 பழங்குடியின தொழில் முனைவோர்களுக்கும், மொத்தம் 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். அவர்களுக்கு தமிழ்நாடு சிமென்ட் கழகத்தின் விற்பனை முகவராக சிமென்ட் விற்பனை நிலையம் அமைக்க ரூ.90 லட்சம் மானியம் வழங்குவதற்கு ஏதுவாக நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.