கனமழை எச்சரிக்கையின் காரணமாக இரண்டு மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இன்று மாலை புயலாக வலுப்பெற கூடும். இதன் காரணமாக 8, 9, 10 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும்.
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். அதேபோல கனமழை எச்சரிக்கை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இன்று கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழ்நாடு மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.