புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலை 9 மணி முதல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று காலை 9 மணி முதல் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இந்த முகாம் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ள நிலையில், இதில் 150-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இந்த முகாமில் 8-ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு படித்தவர்கள் வரை அனைத்து கல்வி தகுதி கொண்டவர்களும் பங்கேற்கலாம்.
இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச் சான்று நகல்களுடன் புகைப்படத்தை எடுத்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேலை தேடும் இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.