வங்காளதேசத்திற்கு எதிராக நடைபெறவுள்ள டி20 தொடரில் இந்திய அனிக்கு தேர்வாகியுள்ளார் மின்னு.
வயநாட்டில் உள்ள பழங்குடி சாதிகளில் ஒன்றான குரிச்சியா இனத்தைச் சேர்ந்தவர் மின்னு. சிறுமியாக இருக்கும் போதே கிரிக்கெட் பயிற்சி பெறுவதற்காக அருகிலுள்ள மைதானத்திற்கு செல்லத் தொடங்கினார். இதற்கே அவர் தினமும் ஒன்றரை மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். அந்த வயதில் இவருக்கு துணையாக கிரிக்கெட் விளையாட பெண்கள் யாருமே இல்லை. இதனால் இவரது வீட்டின் அருகாமையில் இருந்த சிறுவர்களுடன் விளையாடத் தொடங்கினார்.
ஆனால் அங்கு விளையாடும் போது இவருக்கு பேட்டிங், பவுலிங் என எதுவும் கிடைக்காது. மேட்ச் முழுவதும் வெறும் ஃபீல்டராகவே நிற்பார். பள்ளியில் விளையாடத் தொடங்கிய பிறகுதான் இவரது திறமை பலருக்கும் தெரிய ஆரம்பித்தது. மின்னுவின் கிரிக்கெட் திறமையை பார்த்து வியந்த அப்பள்ளியின் ஆசிரியர் எல்சம்மா, உடனடியாக அவரை வயநாடு கிரிகெட் சங்கத்தின் பயிற்சியாளர் ஷானவாஸிடம் அறிமுகப்படுத்தினார்.
அதுவரை மாவட்ட அளவில் விளையாடி வந்த மின்னு, மாநில அளவிலான போட்டிகளில் பங்கெடுக்க ஆரம்பித்தார். அவரின் வளர்ச்சி அதோடு நின்றுவிடவில்லை. அங்கிருந்து தென் இந்திய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டார். இந்தப் போட்டிகள் அனைத்திலும் இவரது ஆல்-ரவுண்டர் திறமை வெளிப்பட்டது. அடுத்தது தான் அவரை உச்சானி கொம்பில் ஏற்றி வைத்தது. பெண்கள் ப்ரீமியர் லீக்கில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடத் தேர்வானார்.
பேட்டிங்கில் முன் வரிசை ஆட்டக்காரராக களமிறங்கும் மின்னு, பவுலிங்கில் ஆஃப் ஸ்பின் போடக் கூடியவர். மாவட்ட அணிக்கு தேர்வான பிறகும் கூட, பள்ளியிலும் கல்லூரியிலும் அவர் ஒருபோதும் பயிற்சி செய்வதை நிறுத்தியதில்லை. “என்னுடைய ஒன்பதாம் வகுப்பிலிருந்து கல்லூரி படிப்பு முடியும் வரை, கிரிக்கெட் அகாடமியில் தான் பயிற்சி பெற்றேன்” எனக் கூறுகிறார்.
தற்போது மின்னுவிற்கு 24 வயதாகிறது. சில சமயங்களில் நாம் பொறுமையாக காத்திருக்க வேண்டும். நமக்கு வெற்றி கிடைக்கும் வரை பயிற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்” என்கிறார்.