Leopard: உத்தரப் பிரதேசத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திடீரென புகுந்த சிறுத்தையால் மக்கள் பீதியில் அலறியத்து ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் புத்தேஷ்வர் சாலையில் உள்ள மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. மணமகன், மணமகள் உட்பட ஏராளமான விருந்தினர்கள் இதில் பங்கேற்று இருந்தனர். இந்நிலையில் திடீரென அங்கு சிறுத்தை ஒன்று நுழைந்தது. இதனை கண்டதும் மண்டபத்தில் இருந்தவர்கள் அலறிஅடித்துக்கொண்டு ஓடினார்கள். மணமகனும், மணமகளும் அங்கிருந்து ஓடிச்சென்று காரில் ஏறிக்கொண்டனர்.
தகவல் அறிந்த போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் நீண்ட நேரம் போராடி அதிகாலை சுமார் 2மணியளவில் சிறுத்தையை பிடித்தனர். இதுகுறித்து வெளியான வீடியோவில் காவல்துறை அதிகாரி முக்தார் அலி சிறுத்தையை பிடிக்க முயற்சிப்பதும், அவரிடம் இருந்த ஆயுதத்தை சிறுத்தை தட்டிச் செல்வதும் பதிவாகி உள்ளது. சிறுத்தை பிடிக்கப்படும் வரை மணமகன், மணமகள் குடும்பத்தினர் வாகனங்களில் பாதுகாப்பாக அமர்ந்திருந்தனர்.