மோசடி செய்த பணத்தை தனது மனைவியின் வங்கி கணக்குக்கு மாற்றி அந்தப் பணத்தில் உல்லாசமாக வாழ்ந்து வந்தவரை காவல்துறை கைது செய்து இருக்கிறது. ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியைச் சார்ந்தவர் ரவிகாந்த் லக்ஷ்மணன் ராவ். இவர் இந்தியாவில் காய்கறிகளை மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனை செய்து வரும் ஒரு நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிறுவனத்தின் கிளை அலுவலகம் சென்னையில் இயங்கி வருகிறது. இந்த நபர் வேலூர் மாவட்டம் குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சார்ந்த சீதாராமன் என்பவர் அவரது நிறுவனத்தோடு இணைந்து இடைத்தரகராக பணியாற்றுவதற்கு 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணப்பித்திருக்கிறார். அதன் பிறகு இடைத்தரகராக பணியாற்றிய அவர் ஏப்ரல் மாதம் வரை இரண்டு கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்தார். மேலும் வியாபாரத்தை விரிவாக்க அவருக்கு ஒரு கோடியே 80 லட்சம் நிறுவனத்திலிருந்து வழங்கப்பட்டது. அதன் பிறகு அவர் பொருட்களையும் வழங்காமல் பணத்தையும் திருப்பி செலுத்தாமல் மோசடி செய்து வருவதாக அந்த புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
இது தொடர்பாக விசாரணையில் இறங்கியது காவல்துறை. அப்போது பல திடுக்கிடும் அதிர்ச்சி சம்பவங்கள் வெளியாகி இருக்கின்றன. வியாபாரத்தில் புதிதாக குடியாத்தத்தைச் சார்ந்த மூன்று பேரை இணைத்து இருக்கிறார் சீதாராமன். அவர்கள் வங்கி கணக்கிற்கு வந்த பணத்தையும் தனது மனைவியின் வங்கி கணக்கிற்கு மாற்றி அந்தப் பணத்தில் உல்லாச வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார் சீதாராமன். இந்தப் பணத்தை வைத்து தனக்கு பென்ஸ் கார், டிராவல் வேன் மற்றும் அகரம் சேரியில் சொந்தமாக ஒரு வீடு என ஏக போகமாக வாழ்ந்திருக்கிறார். மேலும் பெங்களூரில் இருந்து மாடல் அழகிகளை அழைத்து வந்து ஒரு இரவுக்கு 30,000 செலவு செய்து உல்லாசமாக இருந்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சீதாராமனை கைது செய்தனர். மேலும் அவருக்கு இந்த மோசடியில் உடந்தையாக இருந்த அவரது கூட்டாளிகள் சதீஷ்குமார் மற்றும் சரவணன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரான வசந்தகுமார் மற்றும் சரண்ராஜ் ஆகியோரை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. மேலும் சதிஷ்குமாரிடமிருந்து அவரது சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.