கேரள மாநிலம் கொச்சியில் தன் மனைவியை கொன்று விட்டு அவர் வேறு ஒருவருடன் சென்று விட்டதாக குழந்தைகளை நம்ப வைத்து ஏமாற்றிய நபரை காவல்துறை கைது செய்து இருக்கிறது.
கேரள மாநிலம் கொச்சியை சார்ந்தவர் சுஜிவன்(45) இவரது மனைவி ரம்யா (35). தனது மனைவி ரம்யா காணாமல் போனதாக கடந்த மாதம் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார் சுஜீவன். இது தொடர்பான விசாரணையில் சுஜிவனே தனது மனைவியை கொன்று அவர் வீட்டிலேயே புதைத்திருப்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
இது குறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. சுஜிவன்-ரம்யா தம்பதியினருக்கு திருமணம் ஆகி 17 ஆண்டுகள் ஆகின்றன இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறது. மனைவி ரம்யாவின் நடத்தையில் சுஜிவனுக்கு சந்தேகம் ஏற்படவே அவருடன் அடிக்கடி தகராறு செய்து வந்திருக்கிறார். 2021 ஆம் வருடம் அக்டோபர் 16ஆம் தேதி இவர்களுக்குள் ஏற்பட்டு வாக்குவாதம் தீவிரம் அடையவே ஆத்திரத்தில் தனது மனைவியின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்திருக்கிறார் சுஜீவன். அந்த நேரம் வீட்டில் குழந்தைகளும் இல்லாததால் உடலை வீட்டில் முற்றத்திலே புதைத்து விட்டார்.
தாய் எங்கே என்று கேட்ட குழந்தைகளிடமும் அம்மா வேறு ஒரு நபருடன் சென்று விட்டார். அது வெளியில் தெரிந்தால் நமக்கு தான் அசிங்கம். அதனால் அம்மா பெங்களூருக்கு படிக்கச் சென்றதாக கூறி விடுவோம் என சொல்லி அவர்களை நம்ப வைத்திருக்கிறார். அவரது உறவினர்கள் தொடர்ந்து ரம்யாவை பற்றி கேட்டு வந்ததால் அவர்களிடம் வேறொருவருடன் வெளிநாட்டிற்கு சென்று விட்டார் என்று பொய் சொல்லி இருக்கிறார். உறவினர்கள் தொடர்ந்து வற்புறுத்தியதால் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை செய்ததில் தனது மனைவியை கொன்று வீட்டில் புதைத்ததை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடலை தோண்டி எடுத்த போலீசார் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.