புதுச்சேரியில் மருத்துவப் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தேசியக் கொடி ஏற்றினார். பின்னர், சுதந்திர தினவிழாவில் பேசிய அவர், ”புதுச்சேரியில் மருத்துவப் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என்று அறிவித்தார். மேலும், வடகிழக்கு பருவமழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.7.10 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், காமராஜர் நிதியுதவித் திட்டத்தின் கீழ் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்படிப்புக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.19.40 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மாதாந்திர நிதியுதவியாக ரூ.500 உயரத்தி வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், புதுச்சேரி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலைய விரிவாக்கத்திற்காக தமிழகத்திலிருந்து 30 ஏக்கர் நிலம் கையகப்படுத்த ரூ.425 கோடி மத்திய அரசிடம் கோரியுள்ளதாக தெரிவித்தார். மேலும், காரைக்கால் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி கட்ட மத்திய அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது என்றும் முதல்வர் ரங்கசாமி கூறினார்.