மின் கட்டணம் செலுத்துவதற்காக ஒரு Link-ஐ கிளிக் செய்தபோது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.8 லட்சம் திருடப்பட்ட சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளது.
கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஜி.என்.மில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (83). இவரது தொலைபேசி எண்ணிற்கு கடந்த மாதம் 7ஆம் தேதி தெரியாத ஒரு எண்ணில் இருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில், அவரது வீட்டிற்கான மின் கட்டணம் செலுத்தவில்லை எனவும், அதனால் வீட்டின் மின் இணைப்பு இரவிற்குள் துண்டிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனுடன், ஒரு லிங்க்-ம் இணைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, எங்கே தனது வீட்டின் மின் துண்டிக்கப்படுமோ என்று பயந்த நடராஜன், உடனே அந்த லிங்கை கிளிக் செய்துள்ளார்.
இதையடுத்து, வங்கி விவரங்கள் கேட்கவே எதற்கும் இருக்கட்டும் என்று வெறும் ரூ.10 அனுப்பியுள்ளார். இதைத்தொடர்ந்து பணம் எடுப்பதற்காக ATM மையத்திற்கு சென்றுள்ளார். அப்போது தனது வங்கிக் கணக்கில் பணம் குறைவாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, வங்கிக் கணக்கை சோதனை செய்து பார்த்த போது, அதில் இருந்த ரூ.8,07,600 எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அந்த லிங்கை கிளிக் செய்த பிறகே, தனது வங்கியில் இருந்த பணம் போனதை அறிந்த நடராஜன், கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையிடம் புகாரளித்தார். இவர் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதுபோன்று லிங்கை கிளிக் செய்ய சொல்லி குறுஞ்செய்தி ஏதேனும் வந்தால், உடனே அதை செய்து விட வேண்டாம். அரசு சம்பந்தப்பட்ட எதுவானாலும், அதன் அதிகாரப்பூர்வ இணையத்தை தொடர்பு கொண்டோ அல்லது நேரடியாக சென்றோ பார்க்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.