சிவகங்கையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த கல்லூரி மாணவன் புல்லட் ஓட்டிய காரணத்திற்காக கையை வெட்டிய கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகில் மேலப்பிடவூர் கிராமத்தைச் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அய்யாசாமி (வயது19). அய்யாசாமியின் தந்தை இறந்த நிலையில், அவரது சித்தப்பா பூமிநாதன் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.
இவர்கள் அந்த கிராமத்தில் வசதியானவர்களாக இருந்துள்ளனர்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பூமிநாதன் (சித்தப்பா) புதிதாக புல்லட் பைக் ஒன்று வாங்கியுள்ளார். இது அதே கிராமத்தில் வாழ்ந்து வந்த மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞர்களான வினோத், ஆதி ஈஸ்வரன், வல்லரசு இவர்களுக்கு பிடிக்கவில்லை. வாங்கிய மறுநாளே இவர்கள் அந்த பைக்கை அடித்து உடைத்து உள்ளார்கள். பூமிநாதனையும் அடிக்க முயற்சித்துள்ளார்கள். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்கள். பிறகு ஊரில் வைத்து பேசி முடித்துள்ளார்கள்,
இந்நிலையில், நேற்று மாலை இளைஞர் கல்லூரி முடித்துவிட்டு வீடு வரும் பொழுது இந்த ஜாதியில இருந்துகிட்டு எங்க முன்னாடியே நீ எல்லாம் எப்படிடா புல்லட் ஓட்டலாம்.. என்று கூறி இளைஞரின் இரண்டு கைகளையும் வெட்டி உள்ளார்கள். அவரை அழைத்துக் கொண்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லவே அங்கிருந்து உயர் சிகிச்சையாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். தற்போது காயமடைந்த ஐயா சாமிக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் இரண்டு கைகளையும் சேர்ப்பதற்காக அறுவை சிகிச்சை நடந்து வருகிறது.
குடும்பத்துடன் மருத்துவமனைக்கு சென்ற நேரத்தில் மறுபடியும் பூமி நாதனின் வீட்டை அடித்து நொறுக்கி உள்ளார்கள். இதில் ஜன்னல், கதவு, ஸ்விட்ச் போர்டு, வீட்டின் ஓடு சேதம் அடைந்துள்ளது. காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவே இதில் தொடர்புடைய வினோத், ஆதி ஈஸ்வரன் மற்றும் வல்லரசு மூன்று பேரையும் கைது செய்து சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரித்து வருகின்றனர்.