ஒரு கிலோ வெங்காயம் ரூ.35-க்கு விற்பனை செய்யும் நடமாடும் வாகனங்களை மத்திய அரசு தொடங்கி உள்ளது
மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகத் துறை அமைச்சர் பிரல்ஹத் வெங்கடேஷ் ஜோஷி, இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு லிமிடெட் (என்சிசிஎஃப்), இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிமிடெட் (நாஃபெட்) ஆகியவற்றின் நடமாடும் வேன்களை கொடியசைத்து ஒரு கிலோ ரூ. 35-க்கு வெங்காய சில்லறை விற்பனையை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ; உணவுப் பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது அரசின் முன்னுரிமை என்றும், கடந்த சில மாதங்களில் பணவீக்க விகிதத்தைக் குறைப்பதில் விலை நிலைப்படுத்தல் நடவடிக்கைகள் முக்கிய பங்கு வகித்துள்ளன என்றும் கூறினார். அரசிடம் வெங்காய கையிருப்பு 4.7 லட்சம் டன் ஆக உள்ளது என அவர் தெரிவித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ் தொடங்கப்பட்ட விலை நிலைப்படுத்தல் நிதியம், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் போது சந்தையில் தலையிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.
நுகர்வோர் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக தேவையான நடவடிக்கைகளை நுகர்வோர் விவகாரங்கள் துறை எடுத்து வருகிறது என அவர் தெரிவித்தார். விவசாயிகளுக்கு லாபகரமான விலையை உறுதி செய்ய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என அவர் உறுதியளித்தார். டெல்லியிலும் மும்பையிலும் வாகனம் மூலம் வெங்காயத்தின் சில்லறை விற்பனை இன்று முதல் தொடங்கியது. அடுத்த ஒரு வாரத்தில் கொல்கத்தா, குவஹாத்தி, ஹைதராபாத், சென்னை, பெங்களூரு, அகமதாபாத், ராய்ப்பூர் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் விற்பனை தொடங்கும். செப்டம்பர் 3-வது வாரத்திற்குள் நாடு முழுவதும் இது செயல்படுத்தப்படும் என்றார்.