கலபுரகி மாவட்டம் கமலாப்புரா காவல்துறையினர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்த நவீன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது பீதர் மாவட்ட எல்லையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள உம்காரில் இருக்கும் ஒரு கிராமத்தில் கஞ்சா பயிரிட்டு வளர்க்கப்படுவதாகவும், அங்கிருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்வதாகவும் கூறினார்.
எனவே கஞ்சா பயிரிடும் கும்பலை பிடிக்க கலபுரகி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீமந்த் தலைமையிலான காவல்துறையினர் உம்காருக்கு நேற்று முன்தினம் இரவு சென்றனர். இதையடுத்து கஞ்சா பயிரிட்டு வளர்க்கப்பட்டு வரும் தோட்டத்தில் காவல்துறையினர் நின்று கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த 30 பேர் கொண்ட கும்பல் இரும்பு கம்பி போன்ற ஆயுதங்களால் காவல்துறையினரை தாக்கினர்.
இதனால் காவல்துறையினர் தப்பி ஓடினர். ஆனால் அந்த கும்பலிடம் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீமந்த் மட்டும் மாட்டிக் கொண்டார். அவர் மீது அந்த கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றது. உயிருக்கு போராடிய ஸ்ரீமந்த்தை உம்கார் காவல்துறையினர் மற்றும் கர்நாடக காவல்துறையினர் இணைந்து மீட்டு பசவகல்யாணில் இருக்கும் மருத்துவமனையில் சேர்த்தனர். அதன்பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கலபுரகியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆனால் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து கலபுரகி மாவட்ட காவல் சூப்பிரண்டு இஷா பந்த் நிருபர்களிடம் கூறும்போது, சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீமந்த் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பலை விரைவில் கைது செய்வோம் என்று கூறினார்.