சென்னை மெட்ரோவில் புதிய ரூல் ஒன்று கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னையில் தற்போது விம்கோ நகரில் இருந்து அண்ணா சாலை வழியாக விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை உள்ளது. மற்றொரு மார்க்கத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் வரை மெட்ரோ சேவை உள்ளது. இன்னொரு பக்கம் கோயம்பேடு வழியாக செயின்ட் தாமஸ் மவுண்ட் வரையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயில் சேவை சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், 2ஆம் கட்ட மெட்ரோ பணிகள் நடந்து வருகின்றன. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும். இதன் காரணமாக சென்னையில் மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மெட்ரோ பயன்பாடு 6 கோடி என்ற அளவை எட்டியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சென்னை மெட்ரோவில் புதிய ரூல் ஒன்று கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, சென்னை மெட்ரோவில் தற்போது சிறிய அளவிலான சைக்கிள், மடக்க கூடிய சைக்கிள்களை கொண்டு செல்ல முடியும். கூடுதல் கட்டணம் செலுத்தாமல் சிறப்பு பெட்டி கட்டணம் செலுத்தி சைக்கிளை உள்ளே வைத்துக் கொள்ள முடியும். ஆனால், இதை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது சிறப்பு பெட்டிகளில் மட்டும் சைக்கிளை கொண்டு செல்ல முடியும். ஆனால், மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இடையூறு ஏற்பட கூடாது என்பதற்காக தடை செய்ய ஆலோசனை செய்யப்பட்டு வருகிறதாம். விரைவில் அது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் சென்னையில் மாநகர பஸ், மெட்ரோ ரயில், புறநகர் ரயில்களில் ஒரே டிக்கெட் மூலம் பயணிக்கும் வசதியை தமிழ்நாடு அரசு ஏற்படுத்த உள்ளது. இதற்கான சிங்கார சென்னை கார்ட் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக ஒரு கார்ட் அல்லது பாஸ் போன்ற அட்டை வழங்கப்படும். இந்த கார்டை மெட்ரோ நிலையத்தில் ஸ்கேன் செய்து அதில் பயணிக்க முடியும். மின்சார ரயில்களில் செக்கர் சோதனை செய்யும் சமயங்களில் இந்த கார்டை ஸ்கேன் செய்து கொள்ள முடியும். பேருந்துகளில் நடத்துனர்களிடம் ஸ்கேன் செய்யும் கருவிகள் வழங்கப்படும்.
எனவே, இந்த ஒரு கார்டை ரீ சார்ஜ் செய்து அதன் மூலம் மூன்று சேவைகளையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். எந்த சேவையை பயன்படுத்த வசதியாக இருக்கிறதோ மக்கள் அதை பயன்படுத்த முடியும். இதனால் அவர்கள் கவுண்டர்களின் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.