சீனாவில் புதிய வகை கொரோனா அலை ஜூன் மாத இறுதிக்குள் உச்சம் தொடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய வகை கொரோனா உச்சம் தொடும் சமயத்தில் ஒரு வாரத்தில் ஆறரை கோடி பேருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் பல நாடுகளில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவில் ஓமிக்ரான் துணை வகையான XBB வைரஸ் மீண்டும் வேகமாக பரவி வருவதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வகை கொரோனா வைரஸ் சீனாவில் ஏப்ரல் மாதத்தில் இருந்தே பரவத் தொடங்கியது. தற்போது 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இதனால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஜூன் மாத இறுதியில் இந்த கொரோனா அலை உச்சம் தொடும் எனவும் அப்போது ஒரே வாரத்தில் 6.5 கோடி பேருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் கொரோனா பரவத் தொடங்கிய பிறகு ஏற்படும் மிகப்பெரும் அலையாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து XBB வைரஸை தடுக்க XBB. 1.9.1, XBB. 1.5 என்ற 2 புதிய தடுப்பூசிகள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.