மனித உயிர்களை காப்பாற்ற விலங்குகளின் உறுப்புகளை எவ்வாறு பயன்படுத்தலாம், என்பதை அறிய பல நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த ஆராய்ச்சிக்காக பல்வேறு நபர்களின் உடல்கள் தானமாக வழங்கப்படுகின்றன..
அந்தவகையில், NYU Langone Health அறிக்கையின்படி, நியூயார்க்கில் மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்த ஒரு மனிதருக்கு பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டது. தற்போது அந்த சிறுநீரகம் ஒரு மாதத்திற்கும் மேலாக நன்றாக வேலை செய்து வருகிறது. மேலும், இந்த சிறுநீரகத்தின் செயல் திறனை மேலும் இரண்டு மாதங்களுக்கு கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து NYU Langone மாற்று அறுவை சிகிச்சை நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் ராபர்ட் மாண்ட்கோமெரி செய்தியாளர்களிடம் கூறுகையில், உண்மையிலேயே பன்றி உறுப்பு மனித உறுப்பை போல் வேலை செய்வதாக தெரிவித்துள்ளார். மனிதனின் சிறுநீரகத்தை விட பன்றியின் சிறுநீரகம் நன்றாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஜூலை 14ஆம் தேதி இறந்த நபருக்கு பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டது. அது உடனடியாக சிறுநீரை உற்பத்தி செய்யத் தொடங்குவதையும் பார்க்க முடிந்ததாக மாண்ட்கோமெரி தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக இவர் கூறுகையில், வழக்கமாக ஒருவர் உறுப்பு தானம் பெற வேண்டுமானால், தானம் கொடுப்பவர் இறக்க வேண்டும். அப்போது தான் மற்றொருவர் வாழ முடியும். இது நீண்ட காலத்துக்கு சரிப்பட்டு வராது. தற்போது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் 40% நோயாளிகள், அவர்களுக்கான உறுப்பு கிடைப்பதற்கு முன்பே இறந்துவிடுகின்றனர். நாம் பன்றியை உணவாக உட்கொள்கிறோம், பன்றியை மருத்துக்காகவும், அதன் ரத்த நாளங்களையும் பயன்படுத்துகிறோம். எனவே, பன்றியின் உறுப்பை மனிதர்களுக்கு பயன்படுத்துவது பெரிய விஷயமல்ல என்றார்.
இதேபோல், கடந்தாண்டு சிறப்பு அனுமதியுடன், மேரிலாந்து பல்கலைக்கழக அறுவை சிகிச்சை நிபுணர்கள், இறக்கும் மனிதனைக் காப்பாற்றுவதற்கான கடைசி முயற்சியாக மரபணு திருத்தப்பட்ட பன்றியின் இதயத்தை பொருத்தினர். ஆனால், அவர் இரண்டு மாதங்கள் மட்டுமே உயிர் வாழ்ந்தார், தோல்வியடைந்ததற்கான காரணம் தெரியவில்லை.
NYU பரிசோதனையானது, இத்தகைய மருத்துவ பரிசோதனைகளின் தொடக்கத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கான முன்னேற்றங்களில் ஒன்றாகும். அண்மையில், பர்மிங்காமில் உள்ள அலபாமா பல்கலைக்கழகம் மற்றொரு வெற்றியை கண்டது. அதாவது, ஒரு ஜோடி பன்றி சிறுநீரகங்கள், இறந்த மனிதனின் உடலில் பொருத்தப்பட்டது. இது 7 நாட்களுக்கு சாதாரணமாக வேலை செய்தன. சிறுநீரகங்கள் சிறுநீரை மட்டுமே உருவாக்குவதில்லை. அவை உடலில் பலவிதமான வேலைகளை செய்கின்றன.
நேஷனல் கிட்னி ஃபவுண்டேஷனின் கூற்றுப்படி, அமெரிக்காவில் கிட்டத்தட்ட 40 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் 17 பேர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். அதாவது, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் மாற்று அறுவை சிகிச்சை பட்டியலில் உள்ளதாகவும், அதில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் இறந்துவிடுவதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆய்வுகள் முழுமையாக வெற்றி பெறும் பட்சத்தில் லட்சக்கணக்கான மனிதர்கள் இறப்பதை தடுக்க முடியும்.