லால்குடி அருகே ஆதரவற்ற 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கி கருவை கலைத்த காவலரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி நன்னிமங்கலம் காலனி வீடு பள்ளிக்கூட தெரு பகுதியைச் சேர்ந்த பெற்றோரை இழந்த 16 வயது சிறுமி, அவரின் பெரியம்மாவிடம் வளர்ந்து வருகிறார். சிறுமியின் தனிமையை பயன்படுத்தி அப்பகுதியைச் சேர்ந்த போலீஸ்காரர், கலால்துறையில் பணியாற்றும் ஒருவர் என சிலர் சிறுமியிடம் வன்முறையில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும், சிறுமி சிறிது காலம் திருப்பூரில் தங்கி பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், சிறுமி கர்ப்பம் தரித்துள்ளார். சிறுமியின் கர்ப்பத்தை கலைப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த அரசு செவிலியர் சிசிலியானாவிடம் பேரம் பேசப்பட்டது. இதையடுத்து, சிறுமியை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று 4 மாத கருவை கலைக்க முயற்சி செய்துள்ளனர். கருகலைப்பில் சிக்கல் ஏற்படவே மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், சிறுமியை வன்கொடுமை செய்ததாக திருப்பூரைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவலர் பிரகாஷ் கடந்த சில நாட்களாக தலைமறைவாகி இருந்த நிலையில், இதுகுறித்து பிரகாஷின் மனைவி மற்றும் உறவினர்களை அழைத்து விசாரணை நடத்தியதை அடுத்து பிரகாஷ் டிஎஸ்பி அலுவலகத்தில் நேற்று சரணடைந்தார். இதனைத்தொடர்ந்து பிரகாஷ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர். மேலும் சிறுமியிடம் வன்முறையில் ஈடுபட்ட முக்கிய பிரமுகர்களுக்கு காவல்துறையினர் வலைவீசி வருகின்றனர். மேலும், சிறுமிக்கு தொந்தரவு கொடுத்து சிறுமியின் கற்பை சூறையாடி அரசியல்வாதிகளும் அரசு பணியிலும் உள்ள பலர் இன்னும் அந்த கிராமத்திலேயே தலைமறையாக உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. 16 வயது சிறுமியிடம் இதுபோன்று அத்துமீறி நடந்து கொண்டது யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான தண்டனை பாரபட்சமின்றி வழங்க வேண்டும் என்று பகுதியில் உள்ள மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.