இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீன் படப்பிடிப்பு தளத்தில் நடந்த மிகப்பெரிய விபத்தில் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பினார்.
மணிரத்னம் இயக்கத்தில் அரவித் சாமி, மதுபாலா ஆகியோர் நடிப்பில் வெளியான ரோஜா படத்திற்கு முதல் முதலாக இசை அமைத்திருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்தது. ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் ஏ.ஆர். ரஹ்மானை திரும்பி பார்த்தனர். முதல் படத்திலேயே சின்ன சின்ன ஆசை பாடலுக்கு தேசிய விருதை பெற்றார். தமிழைத் தொடர்ந்து ஹிந்திக்கு சென்ற அவர், அங்கும் தனது முத்திரையை பதித்தார். தொடர்ந்து ஹாலிவுட் படங்களுக்கு இசையமைக்க ஆரம்பித்த ஏ.ஆர். ரஹ்மான், ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகள், கோல்டம் க்ளோப் ஆகிய விருதுகளையும் பெற்றார். இந்தியாவின் பெருமைக்கு சொந்தக்காரராக இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இந்நிலையில், ஏஆர் ரஹ்மான் 1995ஆம் ஆண்டு சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கதீஜா ரஹ்மான், ரஹீமா என்ற இருமகள்களும், அமீர் என்ற மகனும் உள்ளார். கடந்த ஆண்டு கதீஜாவுக்கு திருமணம் நடைபெற்றது. ஏஆர் ரஹ்மானின் வாரிசான ஏஆர் அமீன், தனது தந்தையைப் போலவே இசையில் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். அமீன் ஓகே கண்மணி படத்தில் இடம்பெற்ற மௌலா வா சல்லிம எனும் பாடலை பாடி உள்ளார். சச்சின், 2.O , தில் பேச்சாரா உள்ளிட்ட பல படங்களிலும் பாடியிருக்கிறார். அது மட்டுமில்லாமல் தனி ஆல்படம் பாடல்களையும் பாடி உள்ளார்.
இந்நிலையில், ஏஆர் அமீன் தனது இன்ஸ்டாகிராமில், மிகப்பெரிய விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினேன் என பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், இன்று நான் பாதுகாப்பாகவும், உயிருடன் இருப்பதற்காக எல்லாம் வல்ல இறைவனுக்கும், எனது பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், எனது நலம் விரும்பிகளுக்கும், எனது ஆன்மீக குருமார்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நள்ளிரவு 3 மணியளவில் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வந்தது. அதில், கேமரா முன் மும்மரமாக பாடிக்கொண்டு இருந்தேன். அப்போது கிரேனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ட்ரஸ் மற்றும் சரவிளக்குகள் திடீரென்று கீழே சரிந்தன. நல்ல வேளையாக நடுவில் நான் நின்று கொண்டிருந்தேன். இன்னும் சில அங்குலங்கள் முன்னரோ, பின்னரோ நின்றிருந்தாலோ, அங்குமோ, இங்குமோ நகர்ந்து இருந்தாலோ மொத்தமும் தலையில் விழுந்திருக்கும். என்னாலும் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை என பதிவிட்டுள்ளார்.