2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, சி.பி.ஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படுமா இல்லையா என்பது குறித்து இன்று தீர்ப்பளிக்க இருக்கிறது டெல்லி உயர் நீதிமன்றம்.
காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில், தொலைத் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் முறைகேடு ஏற்பட்டதால், மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக சிஏஜி சுட்டிக் காட்டியது. இந்த ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி மற்றும் 15 பேரை விடுதலை செய்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிஐ தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த 2018-ம் ஆண்டில் வழக்கில் விசாரணை தொடங்கியது. சிபிஐ தரப்பு வாதம் கடந்த 2020 ஜனவரி 15-ல் நிறைவடைந்தது. எதிர்தரப்பினரின் வாதம் 2020 பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கியது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று உள்ளிட்ட காரணங்களால் விசாரணையில் தாமதம் ஏற்பட்டது. எனவே வழக்கில் தினசரி விசாரணை நடத்த வேண்டும். வேண்டுமென சிபிஐ டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இதற்கு தினசரி அடிப்படையில் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
சிபிஐ அமலாக்கத் துறை தாக்கல் செய்த மேல்முறையீடு அனுமதி மனுக்களை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி தினேஷ் குமார் சர்மா விசாரித்து வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20-ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, சிபிஐ தரப்பில் ஆஜரான அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் சஞ்சய் ஜெயின் மேல்முறையீடு மனுவை ஏற்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய தனத்தை தரப்பு வாதங்களை முன் வைத்தார்.
வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதி தினேஷ் குமார் சர்மா, மேல்முறையீடு அனுமதி மனுக்கள் தொடர்பாக சிபிஐ அமலாக்கத் துறை, எதிர்மனுதாரர்கள் சார்பில் எழுத்துபூர்வமான வாதங்களை 10 பக்கங்களுக்கு மிகாமல் தாக்கல் செய்ய வேண்டும் என ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் 2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, சி.பி.ஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படுமா இல்லையா என்பது குறித்து இன்று தீர்ப்பளிக்க இருக்கிறது டெல்லி உயர் நீதிமன்றம்.