கத்திப்பாரா மேம்பாலம் அருகே வழிகாட்டிப் பலகை விழுந்து இருவர் காயமடைந்த நிலையில், அதில் ஒருவர் உயிரிழந்தார்.
சென்னை கத்திப்பாரா மேம்பாலம் அருகே சாலையில் பயணிப்பவர்களுக்கு வழிகாட்டும் வகையில் மிகப்பெரிய வழிகாட்டிப் பலகை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்த வழிகாட்டிப்பலகை இரு புறமுமிருந்த கம்பங்களோடு திடீரென பெயர்ந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இருவர் படுகாயமடைந்தனர். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்த வழிகாட்டுப்பலகை விழுந்த விபத்தில் ஒரு அரசுப்பேருந்து பலத்த சேதம் அடைந்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் குறைந்தளவு போக்குவரத்தே இருந்ததால் பெரும் விபரீதங்கள் நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
