புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே கணுவாபெட்டை வன்னியர் வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர். மேலும் மங்கலம் தொகுதி பொறுப்பாளராக இருந்து வந்தார். இந்நிலையில், நேற்றிரவு பேக்கரியில் நின்று பேசிக்கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் செந்தில்குமார் மீது வெடிகுண்டை வீசியுள்ளனர். இதில், நிலைகுலைந்து போன அவரை அந்த கும்பல் கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்தது. இதில் படுகாயமடைந்த செந்தில்குமார், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இந்த சம்பவம் தொடர்பாக வில்லியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், அங்கு விரைந்த போலீசார், செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இக்கொலை சம்பவம் தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். பேக்கரியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அமைச்சரின் ஆதரவாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.