மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை தடுக்காமல், வீடியோ எடுத்து ரசித்த கணவன், காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில் வசித்து வருபவர் ராஜ் கிஷோர் குப்தா. இவரது மகள் சோபிதா குப்தா. குல்மோஹரில் வசிக்கும் சஞ்சய் குப்தா என்பவரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் சோபிதா. இந்த தம்பதிக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. குழந்தை பிறந்த பின்னர் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு ஏற்பட்டபோது, சோபிதா மனமுடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதை சஞ்சய் குப்தா தடுக்காமல் அதை தனது செல்போனில் வீடியோவாக படம் பிடித்துள்ளார். மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். பெற்றோர்கள் ஓடி வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதிருக்கிறார்கள். என்ன நடந்தது.. ஏன் சோபிதா தற்கொலை செய்து கொண்டார் என்று மருமகனிடம் கேட்க, சஞ்சய் குப்தா தனது செல்போனில் எடுத்த அந்த வீடியோவை காட்டி இருக்கிறார்.

இதை பார்த்து, தன் மகள் தற்கொலை செய்து கொண்டதை தடுக்காமல் மருமகன் வீடியோவாக எடுத்து வைத்திருக்கிறார் என்ற ஆத்திரத்தில் சோபிதாவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சோபிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கல்நெஞ்சக்கார கணவன் சஞ்சய் குப்தாவையும் கைது செய்தனர்.