திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் ஊராட்சி ராமாபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவது மகள் அனிதா (17). இவர், தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். சமீபத்தில் வெளியான 12ஆம் வகுப்பு தேர்வில் அனிதா 600-க்கு 435 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். ஆனால், மதிப்பெண்கள் மிகவும் குறைவாக வந்ததாக கூறி அனிதா மனஉளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், அனிதா வீட்டில் தனியாக இருந்த போது தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து போலீசார் அனிதாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பொதுத்தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவி, நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் நேரத்தில் தற்கொலைச் செய்திருப்பதால், நீட் தேர்வு முடிவுகள் குறித்த பயத்தில் தற்கொலையா? வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு அடுத்த நாராயணகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி என்பவரது மகன் ஹரி தற்கொலை செய்து கொண்டார். இவர், பிளஸ்2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமா என்ற பயத்தில் தேர்வு முடிவு வெளியாகும் அன்றைய நாள் காலையிலேயே தற்கொலை செய்து கொண்டார். 2022 – 2023 கல்வியாண்டில் மொத்தம் 8 லட்சத்து 3 ஆயிரத்து 385 மாணவர்கள் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். இதில், 7 லட்சத்து 55 ஆயிரத்து 451 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். பொதுத் தேர்வில் 47 ஆயிரத்து 934 மாணவர்கள் தோல்வி அடைந்து இருந்தனர். இதன் அடிப்படையில், தோல்வி அடைந்த மாணவர்கள் தவறான முடிவுகளை எடுக்காமல் இருப்பதற்காக பள்ளிக்கல்வித்துறை மனநல ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கும் நடவடிக்கையும் மேற்கொண்டது.
குறிப்பாக, சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள 104 உதவி மையத்தில் இருந்து 20 மனநல ஆலோசகர்களால் ஆலோசனை வழங்கப்பட்டது. தேர்வில் தோல்வி அடைந்தாலும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது ஆசிரியர்கள், பெற்றோர்கள், மனநல மருத்துவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பள்ளிகளிலேயே ஆசிரியர்கள் மற்றும் மனநல ஆலோசகர்களால் சிறப்பு வகுப்புகள் நடத்தி மாணவர்களிடம் தற்கொலை எண்ணம் தோன்றாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது