மனைவியை பழிவாங்க நினைத்து கடைசியில் கணவர் உயிரிழந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் கருவேப்பிலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி என்பவரின் மகன் கலையரசன் (30). இவருக்கும், ஷாலினி (26) என்ற பெண்ணுக்கும் ஜனவரி 26ஆம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில், கலையரசன் விஷம் குடித்ததாக கூறி அவரது குடும்பத்தினர் அவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இது தொடர்பாக கலையரசன் போலீசாருக்கு கொடுத்த வாக்குமூலத்தில் மனைவி ஷாலினி தனக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததாக தெரிவித்திருக்கிறார்.
அதாவது, இந்த திருமணத்தில் ஷாலினிக்கு விருப்பமில்லை என்று தெரிகிறது. திருமணம் வேண்டாம் என்று பெற்றோரிடம் கூறிய நிலையில், அவரை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால், ஷாலினி வேறொருவரை காதலித்து வந்த நிலையில், இதுகுறித்து முதலிரவின்போது, தனது கணவரிடம் கூறியுள்ளார்.
பின்னர் மறுநாள் ஷாலினியை அவருடைய பெற்றோர் வீட்டிற்கு கலையரசன் அனுப்பி வைத்துள்ளார். ஆனால், ஷாலினியின் உறவினர்கள் அவரை சமாதானம் செய்து மீண்டும் கலையரசன் வீட்டிற்கே அனுப்பி வைத்தனர். அப்போது தன்னுடன் வாழ பிடிக்காமல் ஜூஸில் விஷம் கலந்து கொடுத்து விட்டதாக கலையரசன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆனால், போலீசார் நடத்திய விசாரணையில் கலையரசன் தான் பூச்சி மருந்தை ஜூஸில் கலந்து குடித்தது தெரியவந்தது. கடந்த மாதம் 13ஆம் தேதி கணவன் – மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது, ஷாலினி தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் கலையரசன், மனைவியை சமாதானப்படுத்தி கடந்த 16ஆம் தேதி தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். ஆனால், தன்னை அவமானப்படுத்திவிட்டதாக கூறி, அவரை பழிவாங்க கலையரசன் திட்டமிட்டுள்ளார்.
இதனால் தனக்குத்தானே பூச்சி மருந்தை கலந்து குடித்துவிட்டு, ஷாலினி மீது பழி போட வேண்டுமென தனது நண்பர்களிடம் கூறியிருந்தது விசாரணையில் அம்பலமானது. மேலும், கலையரசன் மருந்து கடைக்கு சென்று பூச்சி மருந்து வாங்கிய ரசீதும், அங்கு வந்து சென்ற சிசிடிவி காட்சிகளும் போலீசாருக்கு கிடைத்துள்ளது. ஆனால், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கலையரசன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். மனைவியை பழிவாங்க நினைத்து கடைசியில் அவரே உயிரிழந்தது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.