சமீபகாலமாக திடீர் மாரடைப்பு, தோசை, மட்டன், சிக்கன் துண்டுகள் தொண்டையில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவங்களை பார்த்திருக்கிறோம். சமீபத்தில் நாகர் கர்னூல் மாவட்டத்தில் இப்படியொரு சோக சம்பவம் நடந்துள்ளது. தொண்டையில் முட்டை சிக்கியதால் ஒருவர் உயிர் இழந்தார்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நாகர் கர்னூல் மாவட்டம், லிங்காலா, பிஜினப்பள்ளி, வட்டமோன் கிராமத்தில் வசித்து வருபவர் திருப்பத்தையா (வயது 48). இவர் சொந்த வேலையாக லிங்காளா கிராமத்திற்கு வந்துள்ளார். காலையில் உணவு சாப்பிடாததால் அதிக பசியுடன் இருந்துள்ளார், வேலையை முடித்துவிட்டு வரும்போது அங்குள்ள சென்னாம்பள்ளி சதுக்கம் பகுதியில், தள்ளுவண்டி ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட முட்டை ஒன்றை வாங்கி சாப்பிட்டு இருக்கிறார். பசி மயக்கத்தில் அவர் முட்டையை முழுவதுமாக வாயில் திணித்து சாப்பிட முற்பட்டதாக தெரியவருகிறது.
இதனால் முட்டை தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு முதியவர் மயங்கி விழுந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள், அவரை காப்பாற்ற முற்படுவதற்குள் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த லிங்காளா காவல்துறையினர், விரைந்து வந்து திருபத்தையாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் குறித்து விசாரணையும் நடந்து வருகிறது. முதியவர் சாப்பிட்ட முட்டை, அவரின் தொண்டையில் சிக்கியதால் உயிரிழப்பு நடந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.