சேலம் ஓமலூர் அருகே தகாத உறவால் தனது 2 குழந்தைகளை தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் சென்ற பெண்ணை போலீசார் புதுச்சேரியில் கண்டுபிடித்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள செம்மாண்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சவுண்டப்பன், நெசவுத் தொழில் செய்துவரும் இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் பகுதியை சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 9 வயதில் ஆண் குழந்தையும், 7 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். இந்தநிலையில், சவுண்டப்பன் வீட்டருகே பொட்டியபுரம் பகுதியை சேர்ந்த தனபால் என்பவர் நெசவு செய்யும் கூலி வேலை செய்து வந்துள்ளார். இதனிடையே, தனபாலும், சவுண்டப்பன் மனைவி லட்சுமி இருவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அடிக்கடி இருவரும் ஏற்காடு, கொல்லிமலை, மேட்டூர் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றுவருவதை வாடிக்கையாக்கியுள்ளனர்.
இந்தநிலையில், குடும்பத்தை பிரிந்து செல்ல திட்டமிட்ட இருவரும், தனது குழந்தைகளை தவிக்கவிட்டு தலைமறைவாகியுள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் ஓமலூர் போலீசார் கடந்த ஒருவாரமாக தேடிவந்தநிலையில், புதுச்சேரியில் அறை எடுத்து தங்கியிருந்த கள்ளக்காதல் ஜோடியை பிடித்து அழைத்துவந்தனர். அப்போது, தன்னுடன் வருமாறு சவுண்டப்பன் அழைத்துள்ளார். அதற்கு கணவனும் வேண்டாம், குழந்தைகளும் வேண்டும் கள்ளக்காதலன் தனபாலுடன் தான் செல்வேன் என்று லட்சுமி கூறியதாக தெரிகிறது. இதையடுத்து கள்ளக்காதலன் தனபாலுடன் அனுப்ப மறுத்த போலீசார், லட்சுமியை அவரது தாயார் வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.