அதன்படி அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் யாரெல்லாம் சொந்த தொழிலை தொடங்க விரும்புகிறார்களோ அவர்களுக்கு ஒரு வருடம் சம்பளத்துடன் விடுமுறை அளிக்கப்படும் என்ற திட்டத்தை ஐக்கிய அரபு அமீரக அரசு கொண்டுவந்துள்ளது. இந்த திட்டம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வரும், விருப்பம் உள்ளவர்கள் இந்த திட்டத்தை பயனப்டுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் துறை சார்ந்த தலைவரே ஊழியர்களுக்கான இந்த விடுமுறைக்கு ஒப்புதல் வழங்குவார். மேலும் அரசு ஊழியர்கள் புதிதாக தொழில் தொடங்குவதற்கும், நிறுவனங்களை நடத்துவதற்கும் யுஏஇ அரசு உதவும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த திட்டத்தின் மூலம் பல புதிய நிறுவனங்களும், பல்வேறு வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும் என முன் வைக்கப்பட்டு அந்நாட்டு அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டுவிட்டதாக ஐக்கிய அரபு அமீரக துணை ஜனாதிபதி மற்றும் ஐக்கிய அரபு அமீரக பிரதமர் ஆகியோர் தெரிவித்து உள்ளார்கள். மேலும் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட துபாய் ஆட்சியாளர் சேக் முஹம்மது, “இன்று சுய தொழில் தொடங்க விரும்பும் அரசு ஊழியர்களுக்கு ஓராண்டு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கும் திட்டத்தை அமல்படுத்த கவுன்சில் முடிவு செய்து உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பாதி ஊதியமும், வேலை உறுதியுடன் கூடிய விடுமுறையும் அளிக்கப்படும். நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த இளைஞர்கள் புதிய தொழில் நிறுவனங்களை தொடங்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு” என குறிப்பிடப்பட்டுள்ளது.