வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் கல்லூரி முடித்துவிட்டு போலீஸ் வேலைக்காக படித்து வருகிறார். மேலும், ஆரணி அடுத்த விநாயகபுரம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசனின் மகன் ஆகாஷ் (24) கல்லூரி முடித்துவிட்டு, சொந்தமாக கார் வைத்து ஓட்டி வருகிறார். இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வேலூரில் காவல்துறை வேலைக்கு நடந்த ஓட்ட பயிற்சியின்போது, இளம்பெண்ணுடன் ஆகாஷுக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி, அவருடன் ஆகாஷ் உல்லாசமாக இருந்துள்ளார். இதனால், இளம்பெண் கர்ப்பமானதால், ஆகாஷ் தனது வீட்டிற்கு தெரிந்தால் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அதனால், உடனடியாக கருவை கலைத்துவிடலாம். பின்னர், எங்கள் பெற்றோர்களிடம் கூறி சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளலாம் என நம்பவைத்து அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருவை கலைத்துள்ளார்.
மேலும், சில மாதங்களுக்கு முன்பு அந்தபெண் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டதற்கு, பல காரணங்கள் கூறி திருமணம் செய்து கொள்ளாமல், ஆகாஷ் அலைக்கழித்துள்ளார். இதற்கிடையே, ஆரணி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரின் 16 வயது மகள் ஆரணியில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவிக்கும் ஆகாஷுக்கும் சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு அவரையும் காதலித்து வந்துள்ளார்.
இதனையறிந்த முதல் காதலி, பிளஸ் 2 மாணவியை தொடர்பு கொண்டு, ஆகாஷ் அவரை ஏமாற்றியது குறித்து தெரிவித்துள்ளார். இதனால், அந்த மாணவி ஆகாஷின் முதல் காதல் விவகாரம் தெரிந்தவுடன் அவருடன் இருந்த பழக்கத்தை நிறுத்திக் கொண்டுள்ளார். இதனால், ஆகாஷ் அந்த மாணவி பள்ளிக்கு சென்று வரும்போது, தன்னை காதலிக்குமாறு தொல்லை கொடுத்துள்ளார். அதேபோல், கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவி பள்ளிக்கு சென்றபோது, ஆகாஷ் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதேபோல், ஆரணி, கண்ணமங்கலம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல பெண்களை காதலிப்பதாக கூறி ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து, ஆரணி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பள்ளி மாணவியும், இளம்பெண்ணும் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆகாஷை மகளிர் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், இளம்பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றியதுடன் பள்ளி மாணவியிடமும் அத்துமீறியது தெரியவந்தது. இதையடுத்து, மகளிர் இன்ஸ்பெக்டர் அல்லிராணி மற்றும் போலீசார் ஆகாஷை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.