8 ஆம் வகுப்பு மாணவனை கடத்தி வாடகை வீட்டில் தங்கி, அவரை பாலியல் வன்கொடுமை செய்த 30 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவனை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள குடிவாடா பகுதியை சேர்ந்தவர் அந்த இளம்பெண்(30). அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுவனை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
நண்பர்களை சந்திக்க செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுவன் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது குடும்பத்தினர், நண்பர்கள் வீடுகளிலும், உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்து வீடுகளிலும் தங்கள்து மகன் குறித்து தொடங்கினர். இதற்கிடையில், அவர்களது வீட்டிற்கு அருகில் வசிக்கும் குடும்பத்தில் ஒரு பெண்ணையும் காணவில்லை என்று தெரியவந்தது.
இதனையடுத்து, சந்தேகமடைந்த சிறுவனின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இளம் பெண் ஒருவரையும் காணவில்லை என்ற புகார் எழுந்ததும் இவர்கள் இருவரையும் கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். தீவிர விசாரணைக்கு பின்பு இளம் பெண்ணும், காணாமல் போன 15 வயது சிறுவனும் ஹைதராபாத்தில் வாடகை வீட்டில் வசிப்பதாக கடந்த செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது.
தகவலறிந்து ஹைதராபாத் விரைந்த காவல்துறையினர், இளம்பெண் மற்றும் சிறுவன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். சிறுவனை கடத்திச் சென்ற இளம்பெண், அந்த சிறுவனை இதற்கு முன்பே பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக காவல்துறையினர் கூறியது குறிப்பிடத்தக்கது.