ஆதார் அட்டை என்பது பல துறைகளிலும் நாம் பயன்படுத்தக் கூடிய, அவசியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. வங்கிக் கணக்கு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு எனப் பலவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் அடையாள அட்டையை தற்போது மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 100 யூனிட் இலவச மின்சார மானியம் பெறுவதற்கு மின் நுகர்வோர் அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 6ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இந்த உத்தரவு நவம்பர் 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
அதன் படி தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு சார்பில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு ஆதார் இணைக்கப்பட்டு வருகிறது. தற்போது, மின் நுகர்வோர் அட்டையில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் ஓ.டி.பி பெறப்பட்டு ஆதார் இணைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், 2,811 பிரிவு அலுவல சிறப்பு முகாம்கள் மூலம் 3.77லட்சம் இணைப்புகளும், ஆன்லைனில் 3.01லட்சம் இணைப்புகளும் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. டிசம்பர் 1ஆம் தேதி வரை மொத்தம் 41.52 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப் பட்டிருக்கின்றன என்று மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.