தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். மேலும் ஏற்கனவே கமிட்டான படங்களை முடித்து விட்டு முழு நேர அரசியல்வாதியாக மாறப் போவதாகவும் விஜய் கூறியிருந்தார். அதன்படி, கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் விஜய் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் தவெகவின் பிரம்மாண்ட மாநாட்டை விஜய் நடத்தினார். அந்த மாநாட்டில் தனது கட்சியின் கொள்கைகளையும் விஜய் அறிவித்தார். மத்திய மாநில அரசுகளை விமர்சித்தாலும், தமிழகத்தில் ஆளும் திமுக அரசை அவர் கடுமையாக விமர்சித்திருந்தார்.
மேலும் அதன்பின் நடந்த அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விஜய் அப்போதும் திமுக அரசை கடுமையாக சாடியிருந்தார். விஜய்யின் அரசியல் கொள்கைகளுக்கும் அவர் பேசுவதற்கும் முரண்பாடுகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து போராடும் மக்களை விஜய் சந்தித்து பேசினார். அப்போது தேர்தல் பரப்புரை போல் திறந்த வேனில் வந்து விஜய் உரையாற்றினார். விஜய்யின் இந்த செயலும் விமர்சனங்களை கிளப்பியது.
இதனடையே பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் விஜய் தொடர்ந்து நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். மேலும் தவெகவின் மாவட்ட செயலாளர்களையும் விஜய் நியமித்து வருகிறார்.
சமீபத்தில் விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா விஜய்யை சந்தித்து பேசினார். அப்போதே தவெகவில் ஆதவ் அர்ஜுனா இணைய உள்ளதாக கூறப்பட்டது.
விசிகவில் அவர் துணை பொது செயலாளராக இருந்ததால், தவெகவிலும் பொதுச் செயலாளர் பதவியை ஆதவ் அர்ஜுனா கேட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு இந்த பதவியை வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் அவருக்கு தவெகவின் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டால் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தும் என்றும் விஜய் அந்த பொறுப்பை வழங்க தயங்குவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் ஆதவ் அர்ஜுனா இன்று தவெகவில் இணைந்துள்ளார். இதற்காக அவர் பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலத்திற்கு சென்ற அவரை தவெகவின் ஆனந்த் அவர்களை வரவேற்றார். இதை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் முன்னிலையில் ஆதவ் அர்ஜுனா அக்கட்சியில் இணைந்தார்.
எனினும் அவருக்கு தேர்தல் பிரிவை வழிநடத்தும் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 2026 தேர்தலில் அவர் தேர்தல் வியூகங்களை வகுப்பார் என்று கூறப்படுகிறது. ஆதவ் அர்ஜுனாவுக்கு வழங்கப்பட்ட பொறுப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
அதே போல் அதிமுகவின் ஐடி விங் செயலாளர் நிர்மல் குமாரும் இன்று தவெகவில் இணைந்துள்ளார். மேலும் மாற்றுக் கட்சியில் இருந்த சிலரும் இன்று விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர்.
Read More : ”2026இல் புதிய அரசியல் படைப்போம்”..!! ”பாஜகவின் ஏ டீம் திமுக தான்”..!! பரபரப்பை கிளப்பிய சீமான்..!!