சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “சிலவற்றை மட்டும்தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும். டெங்கு, மலேரியா இவற்றையெல்லாம் நாம் எதிர்க்க கூடாது ஒழித்து கட்ட வேண்டும், அதைப்போல தான் இந்த சனாதனமும் அதை எதிர்க்க கூடாது. ஒழிக்க வேண்டும்” என்று பேசினார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு தேசிய அளவில் விவாதங்களை கிளப்பி உள்ளது. அவரது பேச்சுக்கு இந்து அமைப்புகளும், பாஜகவினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பாஜக, விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள், உதயநிதி ஸ்டாலின் மீது காவல் நிலையங்களில் புகார்களை அளித்து வருகின்றன. அதேபோல், உதயநிதிக்கு ஆதரவாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். உதயநிதி பாணியில் தாக்கிய ஆச்சார்யா பிரமோத், திமுக என்பது திராவிட முன்னேற்றக் கழகம் அல்ல D – Dengue, M – Malaria K, – Kosu (DMK) என்று விமர்சித்தார். சனாதன தர்மத்திற்கு எதிராக ஸ்டாலின் மற்றும் ஆ.ராசா உள்ளிட்டோரின் தரக்குறைவான கருத்துகளுக்கு காங்கிரஸ் தலைவர் ஆச்சார்யா பிரமோத் பதிலளித்துள்ளார்.
உதயநிதியை ஆதரவளிப்பதற்கும் அவரது கருத்தை நிராகரிப்பதற்கும் இடையே காங்கிரஸ் கட்சி பிளவுபட்டதாகத் தெரிகிறது. கே.சி.வேணுகோபால், கமல்நாத் உள்ளிட்ட தலைவர்கள், பழைய கட்சி அனைத்து மதங்களையும் மதிக்கிறது என்று கூறிவந்த நிலையில், கர்நாடக அமைச்சரும், காங்கிரஸ் தலைவர் பிரியங்க் கார்கேவின் மகனுமான பிரியங்க் கார்கே, திமுக தலைவர்களின் கருத்துக்கு ஆதரவாக முன்வந்து, ‘சமத்துவத்தை ஊக்குவிக்காத எந்த மதமும், ஒரு மனிதனாக இருப்பதற்கான கண்ணியம் ஒரு மதம் அல்ல என்பதை உறுதிப்படுத்தவில்லை’ என தெரிவித்துள்ளார்.