தன்னை வேட்புமனு தாக்கல் செய்யவிடாமல் தடுத்த திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வடசென்னை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோகர் புகார் அளித்துள்ளார்.
ஆன்லைன் மூலம் அளித்த புகாரில், ”கடந்த 25.03.2024 அன்று வடசென்னை மக்களவைத் தேர்தல் அலுவலகமான மாநகராட்சி 5 மண்டல அலுவலகத்தில் அனைத்து கட்சியினரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். அப்போது அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக நானும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் அலுவலகத்திற்கு சென்றோம். எங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வரிசை எண் 7 வழங்கப்பட்டிருந்தது.
அப்போது என்னை மனுதாக்கல் செய்ய தேர்தல் அதிகாரி அழைத்த போது, பின்னால் அரை மணி நேரம் கழித்து வந்த திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி மற்றும் அவருடன் வந்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர், டவுன்பிளானிங் சேர்மன் இளையஅருணா மற்றும் வழக்கறிஞர் மருதுகணேஷ் ஆகிய 7 பேர், எங்களை தள்ளி விட்டு உள்ளே சென்றனர்.
அத்துடன் நாங்கள் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள், நாங்கள் வேட்புமனு தாக்கல் செய்தபின்பு தான் நீங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி தேர்தல் அதிகாரி முன்பு அமர்ந்தனர். அத்துடன் எங்களுக்கு அமர இடம் தராமல் சுமார் 2 மணிநேரமாக வாக்குவாதம் செய்து செய்தனர். பிறகு தேர்தல் அதிகாரி வருகைப் பதிவேட்டில் ஆய்வு செய்து, சிசிடிவி மற்றும் மற்ற அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி கலாநிதி வீராசாமி எங்கள் வருகைக்கு பின் தான் வந்தார் என்று தெரிந்து கொண்டார். மேலும், அவர் பெற்ற டோக்கன் எண் 8 என்று கூறி அவர்களை எழுந்து வெளியே செல்லுமாறு கூறிவிட்டு எங்களை வேட்புமனு தாக்கல் செய்யுமாறு கூறியதாக தெரிவித்துள்ளார்.
அதற்கு திமுகவினர் மிரட்டும் தொனியில் முடிந்தால் எங்களை தூக்கிப் பார் என்று வாக்குவாத்தில் ஈடுபட்டனர். அங்கு நடைபெற்ற அனைத்திற்கும் வீடியோ பதிவு ஆதாரமாக உள்ளது. வேட்புமனு தாக்கலின் போது தேர்தல் சட்டவிதி முறையை மீறி 5 நபர்கள் மட்டும் செல்லுவதற்குப் பதிலாக 7 நபர்களுக்கு மேல் உள்ளே நுழைந்தற்கும் வீடியோ இருக்கிறது. எனவே அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள், சென்னை மாநகராட்சி மேயர், டவுன் பிளானிங் சேர்மன் மற்றும் வழக்கறிஞர் போன்றவர்கள் தங்களின் அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்கும், அரசாங்க அலுவலர்களின் வேலையை செய்யவிடாமல் தடுத்ததற்கும், எங்கள் மீது தவறே இல்லாதபட்சத்தில் 2 மணிநேரம் காக்க வைத்து எங்களை மிரட்டியதற்கும், தகுந்த வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை வேண்டும் என்று புகாரில் கூறியுள்ளார். இதுதொடர்பாக புகாரை பெற்று காவல் ஆணையர் அலுவலக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More : Lok Sabha | வாக்கு சேகரிக்க வந்த தமிழச்சி தங்கபாண்டியனை விரட்டியடித்த பொதுமக்கள்..!! ஏன் தெரியுமா..?