2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா பரவல் உலகம் முழுவதும் பேரழிவுகளை ஏற்படுத்தியது. எனவே தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், 4-வது அலை ஏற்படுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.. எனினும், கொரோனா பரவல் அதிகரிப்பால் புதிய அலை ஏற்பட வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.. ஏனெனில் தற்போதைய பரவல் சில நாட்களில் முடிவடையும் என்றும், அநேகமாக, ஏப்ரல் இரண்டாவது வாரத்தில், பாதிப்பு குறையத் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளனர்..
பிரபல மருத்துவர் சுச்சின் பஜாஜ் பேசிய போது “ கொரோனா போன்ற தொற்றுநோய்களை முன்னறிவிப்பதற்கும் தடுப்பதற்கும் விஞ்ஞான உலகம் அதன் புரிதல் மற்றும் தொழில்நுட்பத்தில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. இத்தகைய வைரஸ்களின் வடிவம் அவற்றின் மரபணு அமைப்பில் அல்லது அவற்றின் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் வேறுபடலாம் என்று விஞ்ஞானிகள் ஊகித்துள்ளனர்.
உதாரணமாக, இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையானது, முதல் அலையிலிருந்து வேறுபட்ட மரபணு அமைப்புடன் கூடிய தொற்றுநோயால் பாதிக்கப்பட்டது. எனவே, இரண்டாவது அலையில் தொற்றுநோய்க்கான தடுப்பு நடவடிக்கைகளும் சற்று வித்தியாசமாக இருந்தன..” என்று தெரிவித்தார்..
கோவிட் நிபுணரும் மருத்துவருமான ரகுவிந்தர் பராஷர் இதுகுறித்து பேசிய போது “ கடந்த அலைகளிலிருந்து வைரஸ் வடிவங்களில் உள்ள வேறுபாடுகளைப் புரிந்துகொள்வது அவசியம், ஏனெனில் அவை நமக்கு மேலும் புரிந்துகொள்ளவும் வைரஸ் தொற்றுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை உருவாக்கவும் உதவும். அதன்படி தற்போதைய கொரோனா பாதிப்பின் உச்சம் 15 முதல் 20 நாட்களுக்குள் இருக்க வேண்டும், பின்னர் பாதிப்பு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று தெரிவித்தார்..
இதே போல் மருத்துவர் ஜுகல் கிஷோர் பேசிய போது “கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, ஆனால் வேகம் மெதுவாக உள்ளது.. எனவே இது வேகமாக பரவும் தொற்றுநோயாகத் தெரியவில்லை. இல்லையெனில், கடந்த இரண்டு வாரங்களில் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்திருக்கும்.. எனவே இதனால் 4-வது அலை ஏற்படுவதற்கு சாத்தியமில்லை..” என்று தெரிவித்தார்..