வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் சுகாதாரத்துறை மைச்சரும் தற்போதைய விராலிமலை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ-வுமான விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் சற்றுமுன் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை 8ஆண்டு காலம் தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் புதுக்கோட்டையை சேர்ந்த விஜயபாஸ்கர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்17ஆம் தேதி அன்று வருமானத்தை விட ரூ.35.79கோடி கூடுதலாக (54சதவீதம் கூடுதலாக) சொத்து சேர்த்தாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அடுத்த நாளே விஜயபாஸ்கர் உள்ளிட்ட 54 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அந்த சோதனையில் கணக்கில் வராதா ரூ.23.8 லட்சம் கணக்கில் வராத பணம், 4.87 கிலோ தங்கம், 3.75 கிலோ வெள்ளி, 136 கனரக வாகனங்களின் பதிவு சான்றிதழ் மற்றும் 19 ஹார்ட் டிஸ்க்குகள் போன்றவைகளை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இது தொடர்பான வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.கடந்த மே மாதம் 2023 அன்று 216 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இந்த வழக்கின் விசாரணைக்காக கடந்த 5ஆம் தேதி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில் விஜய் பாஸ்கர் மட்டும் ஆஜரானார். அதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் 29ஆம் தேதி இருவரையும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் தற்போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அடுத்த மாதம் 26ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.