தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 500 கோயில்களில் கிரெடிட், டெபிட் கார்டு பயன்படுத்தி அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் இதர சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அமலுக்கு வருகிறது என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
அதன் படி, முதற்கட்டமாக பழநி முருகன் கோயிலில் சோதனை அடிப்படையில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. தற்பொழுது மாநிலம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 500 கோயில்களில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பயன்படுத்தி கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக SBI வங்கி நிர்வாகத்துடன் அறநிலையத்துறை ஒப்பந்தம் செய்துள்ளது.
விரைவில் வங்கி நிர்வாகம் சார்பில் பணம் வசூலிக்கும் இயந்திரம் கோயில்களுக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் கோயிலில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இதுகுறித்து பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. பின்னர் கோயில்களில் இந்த புதிய முறை அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.